சேலம் உழவர் சந்தைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.15-க்கு விற்பனை-மற்ற காய்கறிகளின் விலையும் உயர்வு
சேலம் உழவர் சந்தைகளில் ஒரு முருங்கைக்காய் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் பெங்களூரு, ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு, இஞ்சி உள்ளிட்ட பொருட்களும் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் சின்னவெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, கத்திரி, பச்சை மிளகாய் உள்ளிட்ட சில காய்கறிகள் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக முருங்கைக்காய் கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது. ஒரு முருங்கைக்காய் ரூ.15 வரை விற்கப்படுகின்றன. அதுவும் உழவர் சந்தைகளுக்கு ஒரு சில விவசாயிகளே குறைந்தளவில் முருங்கைக்காய் கொண்டு வருகின்றனர்.
ரூ.195-க்கு விற்பனை
இதேபோல் பழைய இஞ்சி கிலோ ரூ.195 வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.220 வரை விற்கப்படுகிறது. உழவர் சந்தைகளில் பீன்ஸ் கிலோ ரூ.105-க்கும், கேரட் ரூ.70-க்கும், தக்காளி ரூ.32-க்கும், சின்ன வெங்காயம் ரூ.62-க்கும், பீட்ரூட் ரூ.50-க்கும், பச்சை மிளகாய் ரூ.60-க்கும், அவரை ரூ.60-க்கும், கத்தரிக்காய் ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறும் போது, கோடைக்காலம் என்பதால் சில காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. குறிப்பாக இஞ்சி வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை அதிகமாக உள்ளது. பீன்ஸ், கேரட் விலை ஒரே சீராக உள்ளது. தற்போது முருங்கைக்காய் சீசன் இல்லை என்பதால் அதன் விலை எகிறி உள்ளது என்றார்.