கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டாக வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்


கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டாக வீட்டுக்குள் முடங்கிய குடும்பம்
x

கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த குடும்பத்தினரிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நேசமணிநகர் பழைய ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50 வயது ஆகிறது. அவருக்கு 26 மற்றும் 25 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீடு கடந்த 2 ஆண்டுகளாக உள்பக்கமாக பூட்டியே கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவ்வப்போது அந்த வீட்டின் குடும்ப தலைவியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவே இல்லை. தன் 2 மகள்கள் மற்றும் அவருடைய உறவுக்கார முதியவர் ஒருவர் என மொத்தம் 4 பேரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.

கேட்டை உடைத்து அதிகாரிகள் விசாரணை

இந்த நிலையில் 4 பேரும் கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக தகவல் பரவியது. இதுபற்றி சமூக நலத்துறைக்கும் புகார் சென்றது. உடனே சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு விரைந்து வந்து அவர்களை வெளியே வரும்படியும், கதவை திறக்கும்படியும் கூறினர். ஆனால் அவர்கள் ஜன்னலை திறந்து எட்டிப்பார்ப்பது, செல்போனை வைத்துக் கொண்டு படம் எடுப்பது என வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தனரே தவிர வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து விரைந்தனர். பின்னர் வீட்டின் வெளிப்பக்க கேட்டை உடைத்து அதிகாரிகளும், போலீசாரும் உள்ளே சென்றனர். அதே சமயத்தில் வீட்டிற்குள் இருந்த கேட்டை அந்த குடும்பத்தினர் திறக்கவில்லை. மேலும் வெளியே வர மாட்டோம், கேட்டையும் திறக்க மாட்டோம் என்றனர். எனவே கேட்டின் மறுபக்கத்தில் இருந்து அதிகாரிகளும், போலீசாரும் வீட்டுக்குள் முடங்கியவர்களிடம் விசாரித்தனர்.

கொரோனாவுக்கு பயந்து...

அப்போது மணிமேடை பகுதியில் தான் வாடகைக்கு விட்டுள்ள கடையை வாடகைக்கு எடுத்துள்ள நபர் தங்களை மிரட்டுவதால் வீட்டுக்குள் முடங்கி இருப்பதாக அந்த வீட்டில் உள்ள குடும்ப தலைவி கூறினார். மேலும் கொரோனா பரவலுக்கு பயந்தும் வீட்டிலேயே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையை வாடகைக்கு நடத்தி வரும் கடைக்காரரை காலி செய்து தரும்படி கேட்டு கலெக்டருக்கு மனு எழுதி தரும்படி அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதன்படி அவரும் மனு எழுதிக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மனுவை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர். கடைசி வரை அந்த பெண் உள்பக்க கேட்டை திறக்கவே இல்லை.

மருத்துவ ஆலோசனை

இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட வீட்டில் தாய், அவருடைய 2 மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 4 பேர் உள்ளனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். வெளியாட்களுக்கு பயந்து வீட்டுக்குள் இருப்பதாக கூறினார்கள். ஆனால் அந்த பெண்ணின் 2 மகளும் நன்கு படித்தவர்கள். அவர்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய கடைகள் உள்ளன. அந்த கடைகள் மூலம் மாதம் தோறும் வாடகை பணம் வருகிறது. அதை வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது" என்றனர்.


Next Story