மரக்காணம் அருகே டிராக்டரில் ஏற்றிச்சென்ற மின்கம்பம் தாக்கி விவசாயி பலி
மரக்காணம் அருகே டிராக்டரில் ஏற்றிச்சென்ற மின்கம்பம் தாக்கி விவசாயி உயிாிழந்தாா்.
மரக்காணம்,
செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கம் அருகே கப்பிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 64). விவசாயி. இவரது மகள் நிஷா. இவர் மரக்காணம் அருகில் ஊரணி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை கல்லூரியில் கொண்டு விட கோதண்டராமன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். கப்பிவாக்கத்தில் இருந்து இ.சி.ஆர் சாலையில் சென்றபோது எதிரே மின் கம்பங்களை டிரைலரில் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. கைப்பானி பகுதியில் சென்றபோது, மின் கம்பத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்துள்ளது. இதை ஓட்டிவந்த டிரைவர் திடீர் என இ.சி.ஆர். சாலையில் இருந்து வலதுபுறமாக டிராக்டரை திருப்பி உள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டிராக்டர் டிரைலரில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின்கம்பம் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி கோதண்டராமன் மீது தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தன் கண் முன்பே நடந்த இந்த சம்பவத்தில் இறந்த தந்தையின் உடலை பார்த்து மகள் நிஷா கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று விவசாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.