பழையகாயல் அருகே விவசாயி மர்மச் சாவு
பழையகாயல் அருகே விவசாயி மர்மச் சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
பழையகாயல் அருகே தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி 15 நாட்கள் கழித்து மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விவசாயி
பழையகாயலை அடுத்துள்ள கோவங்காடு வடக்கு தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் ராஜாமணி (வயது 57). விவசாயி.
இவர் கடந்த மாதம் 26-ந்தேதி இரவு தனது வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
மறுநாள் காலை வரை வீடு திரும்பாததால், அவரை குடும்பத்தினர் தேடி உள்ளனர். தொடர்ந்து உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவரை பற்றி தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் அவரது மருமகன் பாஸ்கர் புகார் மனு அளித்துள்ளார்.
மர்மச்சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் பழையகாயலை சேர்ந்த யோகராஜ் என்பவர் தோட்டத்தில் ராஜாமணி மர்மமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மர்மச் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.