மர்மமாக இறந்து கிடந்த விவசாயி
கோத்தகிரி அருகே மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே மர்மமான முறையில் விவசாயி இறந்து கிடந்தார். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்தினார்.
தலையில் காயம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட குஞ்சப்பனை புதூர் புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜு (வயது 60), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆதிவாசியான ராஜு வழக்கம் போல குஞ்சப்பனையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலைக்கு அருகே புதுத்தோட்டம் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார்.இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இந்தநிலையில் நேற்று தோட்டத்தில் ராஜு தலையில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்த இடம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே கோவை சரக டி.ஐ.ஜி. இந்த வழக்கை கோத்தகிரி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்ெகாண்டனர்.
தொடர்ந்து தடயவியல் துறை உதவி இயக்குனர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டதில், மர்மமாக இறந்து கிடந்த ராஜு தவறி கல்லின் மீது விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான், விவசாயி இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.