100 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி


100 அடி உயர மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி
x

நாட்டறம்பள்ளி அருகே தாயின் நகை- பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் 100 அடி உயர உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே தாயின் நகை- பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் 100 அடி உயர உயர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நகை- பணம் பிரிப்பதில் தகராறு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த குண்டுரெட்டி மேடு பகுதியில் உள்ள தோழன் வட்டத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரது மகன்கள் விஜயன் (வயது 60), பாண்டுரங்கன் (64). மேலும் 2 மகள்களும் உள்ளனர். சாம்ராஜ் மனைவி லட்சுமி கடந்தசில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். லட்சுமி வைத்து இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை 4 பிள்ளைகளுக்கும் பிரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஊர் பொதுமக்கள், லட்சுமி நகைகளை பெண் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு விஜயன் எதிர்ப்பு தெரிவித்தார். பாண்டுரங்கன் மகன் அருள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தனது பாட்டி லட்சுமி இறந்ததால் ஊருக்கு வந்திருந்தார். அவர் லட்சுமிக்கு சொந்தமான 12 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை தனக்கு சொந்தம் என கூறி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

தற்கொலை மிரட்டல்

அதற்கு விஜயன் என்னுடைய அம்மாவின் தங்க நகை எனக்கும் சொந்தம் எனக்கூறி, அண்ணன் மகன் அருளிடம் பணத்தையும், நகையையும் பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார்.‌ இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நகை, பணம் தர முடியாது என அருள் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த விஜயன் நேற்று காலை 7.30 மணியளவில் குண்டுரெட்டி மேடு பகுதியில் உள்ள 100 அடி உயர உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழ இறங்கி வருமாறு கூறினார்கள்.

பரபரப்பு

ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து, பணம், நகையை பிரித்து தருவதாக கூறினால் மட்டுமே கிழே இறங்கி வருவதாக கூறினார். இதனால் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நகைகளை பிரித்து தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் விஜயன் கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story