உடலில் மண்எண்ணெய் ஊற்றி கலெக்டர் முன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி


உடலில் மண்எண்ணெய் ஊற்றி கலெக்டர் முன் தற்கொலைக்கு முயன்ற விவசாயி
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் முன் விவசாயி மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

மொத்தம் 296 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தீக்குளிக்க முயற்சி

அதைத்தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுக்களை வாங்கினார். அப்போது அங்கு திருப்பத்தூரை அடுத்த அகரம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 50) என்பவர் தனது நிலத்தை அண்ணனும், அவரது மகன்களும் சேர்ந்து அபகரித்து கொண்டதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தான் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்த கலெக்டர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசார் அவரது கையில் இருந்து மண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவரது உடலில் தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மண்எண்ணெய் ஊற்றிய நபர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நலத்திட்ட உதவி

அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நல வாரிய உதவித் தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, உதவி ஆணையர் (கலால்) பானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story