விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்குவிஷபாட்டிலுடன் வந்த விவசாயியால் பரபரப்பு
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு விஷபாட்டிலுடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது முதியவர் ஒருவர் விஷபாட்டிலுடன் மனு கொடுக்க வந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விஷபாட்டிலை கைப்பற்றினர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், அவர் விழுப்புரம் அருகே சின்னக்கள்ளிப்பட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 71), விவசாயி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது நிலத்தின் கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 17 முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதற்காக விஷபாட்டிலுடன் வந்ததாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் அறிவுரைகூறி கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார். மனுவை பெற்ற அதிகாரிகள், இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.