வயலில் காளைமாடு வடிவில் நெல் சாகுபடி செய்த விவசாயி
தலைஞாயிறு அருகே வயலில் காளைமாடு வடிவில் விவசாயி ஒருவர் நெல் சாகுபடி செய்திருந்தார்.
வாய்மேடு:
தலைஞாயிறு அருகே உள்ள மாராச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு காளிதாஸ்.இயற்கை விவசாயியான இவர் பாரம்பரிய நெல்ரகத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், உழவுக்கு உற்ற தோழனாக இருக்கும் மாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் தனது வயலில் சின்னார் என்ற பாரம்பரிய நெல் ரகத்தை காளை மாடு வடிவில் பயிரிட்டுள்ளார்.115 நாள் வயதுடைய குறுவை பயிரான சின்னார் என்ற பாரம்பரிய ரகம் மருத்துவ குணம் உடையது. சிகப்பு நிற கதிர்களை உடைய இந்த பயிர், மழை வெள்ளத்தினால் கீழே சாயாத தன்மையுடையது. இதனை காளையின் உருவத்தில் வயலில் நட்டு வைத்து, அதனைச் சுற்றி தீவனப் பயிரான குதிரைவாலியை வளர்த்துள்ளார். தற்போது அந்த பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் உயரத்தில் இருந்து பார்த்தால் காளை உருவம் தெளிவாக தெரிகிறது. இதனை டிரோன் மூலம் பிடிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.