தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது
தொளசம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். அவர் பயிரிட்டு இருந்த 26 கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்யப்பட்டது.
ஓமலூர்,
தோட்டத்தில் கஞ்சா செடி
சேலம் மாவட்டம், தொளசம்பட்டி அருகே மானத்தாள் கிராமம் கங்காணிப்பட்டி கோட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (வயது 69), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் மதுவிலக்கு போலீசார் அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் விவசாயி ராஜாக்கண்ணு தனது விவசாய தோட்டத்தில் உள்ள கஞ்சா செடிகளை பறித்து உலர வைத்து அதை சிறு சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து கடைகளுக்கு சென்று விற்பனை செய்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.
கைது
இதையடுத்து நேற்று போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி ராஜாக்கண்ணுவை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரது விவசாய தோட்டத்தில் இருந்து 26 கஞ்சா செடிகளையும் போலீசார் பிடுங்கி பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜாக்கண்ணுவை கைது செய்தனர்.