வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்; தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம்
வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பொது இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணியுமாறு தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
சென்னை,
இந்தியாவில் 'இன்புளூயன்சா எச்.3. என்.2' வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கிறது.
1,000 மருத்துவ முகாம்
இந்த காய்ச்சலுக்கு பெங்களூருவில் ஒருவரும், அரியானாவில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக இந்த வைரஸ் காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால், அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 10-ந்தேதி (நேற்று) தமிழ்நாட்டில் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது.
அமைச்சர் பேட்டி
அந்த வகையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திடீர் நகரில் நடைபெற்ற முகாமை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் 200 முகாம்கள்
சமீப காலமாக எச்.3.என்.2 என்று சொல்லக்கூடிய வைரஸ் காய்ச்சல் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த காய்ச்சலில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த வாரம் ஐ.சி.எம்.ஆர். ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டு இருந்தது.
அதன்படி, ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்களை தொடங்கி உள்ளோம். சென்னையை பொறுத்தவரை வார்டுக்கு ஒன்று என்ற வகையில் 200 காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற 800 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற இருக்கிறது.
வீட்டில் தனிமை
'எச்.3.என்.2' வைரஸ் காய்ச்சலுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் மருந்துகள் கையிருப்பில் வைத்துகொள்ள வேண்டும் என்று ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனவே, மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை.
3 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டாலே இதை குணப்படுத்த முடியும். காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெளியில் வந்தால் அவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் இந்த காய்ச்சல் பரவும் என்பதாலேயே அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முககவசம்
கொரோனா பேரிடர் காலத்தில் எப்படி நாம் முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்தோமோ அதேபோல நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில், பொது இடங்களில் இந்த பேரிடர் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல, சமீபகாலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் பாதிப்பின் தன்மை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் வந்துபோன ஒமைக்ரான் வகைகளில் ஒரு வகையான வைரசால் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து கொண்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு கடந்த மாதம் 2 என்ற அளவில் குறைந்திருந்தது. இப்போது 25 என்ற அளவில் உயர்ந்துள்ளது. இருந்தாலும், பொதுமக்கள் பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. பொதுமக்கள் வரும்முன் காப்போம் என்ற வகையில் பொது இடங்களில் முககவசம் அணிவது அவசியமான ஒன்று. தேவைப்பட்டால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.
ஆசிரியர் மீது நடவடிக்கை
தேவைக்கேற்ப காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பள்ளி மாணவர்களுக்கு சத்துமாத்திரை வழங்கப்படும். ஒரு மாணவருக்கு ஒரு மாத்திரை மட்டுமே ஆசிரியர் வழங்குவார். ஊட்டியில் உள்ள உருது பள்ளியில் சத்துமாத்திரைகளை வியாழக்கிழமை தருவதற்கு பதிலாக வெள்ளிக்கிழமை தந்துள்ளார்கள். இது பெரிய தவறு.
வழக்கமாக சத்து மாத்திரை தரும் ஆசிரியருக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியர், ஒரு மாத்திரை கொடுப்பதற்கு பதிலாக அட்டை அட்டையாக கொடுத்துள்ளார். இதனால், 6 மாணவிகள் போட்டிபோட்டுக்கொண்டு அவற்றை சாப்பிட்டு உள்ளார்கள். மரணம் அடைந்த மாணவி 70 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதை அந்த ஆசிரியரும் கவனிக்கவில்லை. இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மேலும், 2 சுகாதாரத்துறை ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறையும் இதில் தொடர் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) சாந்தகுமாரி, கவுன்சிலர் ஸ்ரீதரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.