ரெயிலில் இருந்து தவறி விழுந்து பெண் 'கார்டு' பலி
குடியாத்தம் அருகே பணியில் இருந்த ரெயில்வே பெண் ‘கார்டு’ ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானார். இதனால் சுமார் 45 நிமிடம் ரெயில் தாமதமாக சென்றது.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே பணியில் இருந்த ரெயில்வே பெண் 'கார்டு' ரெயிலில் இருந்து தவறிவிழுந்து பலியானார். இதனால் சுமார் 45 நிமிடம் ரெயில் தாமதமாக சென்றது.
ரெயில்வே கார்டு பலி
கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி மினிமோல் (வயது 36). இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கே.கே.சி.நகர் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே கார்டாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை பணியில் இருந்தார்.
நேற்று மதியம் ரெயில் குடியாத்தம் - வளத்தூர் ெரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது மினிமோல் பச்சைக் கொடியை காட்ட முயன்றார். அப்போது கொடியுடன் தவறி கீழே விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பின்னர் ரெயில் என்ஜின் டிரைவருக்கு ரெயில்வே கார்டு மூலம் எந்தவித தகவலும் கிடைக்காததால், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் டிரைவர் ரெயிலை நிறுத்தி, பச்சகுப்பம் ரெயில் நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கார்டு பெட்டிக்கு சென்று பார்த்தபோது கார்டு இல்லாதது தெரியவந்தது.
45 நிமிடம் தாமதம்
அதைத்தொடர்ந்து ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ெரயில்வே கார்டை தேடியபோது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மினிமோல் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மினிமோல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திலிருந்து மாற்று கார்டு வரவழைக்கப்பட்டு சுமார் 45 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.