நெஞ்சு வலியால் துடித்த அரசு பஸ் டிரைவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்


நெஞ்சு வலியால் துடித்த அரசு பஸ் டிரைவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டர்
x

நெஞ்சு வலியால் துடித்த அரசு பஸ் டிரைவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றிய பெண் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

கோவையில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்னைக்கு ஒரு அரசு விரைவு பஸ், பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை சேர்ந்த சண்முகநாதன் (வயது 47) ஓட்டினார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு அந்த பஸ் வந்தது. அப்போது டிரைவர் சண்முகநாதனுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அப்போது அந்த வழியாக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்ட பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையை சேர்ந்த தருண்குமார், கணேசன் ஆகியோர் இது குறித்து உடனடியாக ரோந்து பணியில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமியிடம் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி உடனடியாக சன்முகநாதனை ஊர்க்காவல் படையினர் உதவியுடன் மீட்டு, தனது போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். மருத்துவமனையில் சண்முகநாதனுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து, அவருக்கு சிகிச்சை முடியும் வரை சுமார் 2 மணி நேரம் அங்கு இருந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் சண்முகநாதனை மீண்டும் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தனது ரோந்து பணியை தொடர்ந்து மேற்கொண்டார்.

நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்கு போராடிய அரசு பஸ் டிரைவரை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி மற்றும் ஊர்க்காவல் படையினர் தருண்குமார், கணேசன் ஆகியோரின் மனிதாபிமான செயலை பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அவர்களை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Next Story