போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் கைதிக்கு கொரோனா


போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் கைதிக்கு கொரோனா
x

நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் கைதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண் கைதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

தீவிர நடவடிக்கை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், சிகிச்சைக்கு வருவோர் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி நெல்லை மாவட்டத்திலும் ஆஸ்பத்திரிகளுக்கு வருபவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

பெண் கைதி

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் சிக்கி சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனையுடன் கொரோனா இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி நெல்லை தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொரோனா பரிசோதனை முடிவு நேற்று காலை வெளியானது. அதில், ஒரு பெண் கைதிக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கிருமிநாசினி தெளிப்பு

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவுப்படி மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் கவச உடை அணிந்த 4 தூய்மை பணியாளர்கள் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும், நுழைவு வாசல் பகுதியிலும் பிளீச்சிங் பவுடர் தூவினார்கள். மேலும் சம்பந்தப்பட்ட பெண் கைதியின் வீடு பகுதியிலும் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

போலீசாருக்கு பரிசோதனை

அதே நேரத்தில் அந்த பெண் கைதி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பெண் கைதியிடம் விசாரணை நடத்தி, சிறைக்கு அழைத்து சென்ற இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story