தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண் தூய்மை பணியாளர்
6 மாதம் சம்பளம் வழங்காததால் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண் தூய்மை பணியாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
6 மாதம் சம்பளம் வழங்காததால் நாகை கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண் தூய்மை பணியாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்றார். இதை பார்த்து கலெக்டரின் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்.
தூய்மை பணியாளர்
தொடர்ந்து அந்த பெண் கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது பெயர் லதா(வயது 45). நான் கீழ்வேளூர் அருகே வடகரை பகுதியில் வசித்து வருகிறேன். வடகரை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளராக 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன்.
கடந்த 6 மாதங்களாக எனக்கு சம்பளம் வழங்கவில்லை. ஏன் எனக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கேட்டால் நிதி குறைவாக உள்ளது என்று கூறி வந்தனர். ஆனால் என்னுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு எனக்கு மட்டும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
6 மாதம் சம்பளம் வழங்கவில்லை
கணவர் இல்லாமல் என்னுடைய வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்தி வந்த எனக்கு 6 மாதம் சம்பளம் வழங்காததால் குடும்பம் நடத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி தீக்குளித்து தற்கொலை செய்து விடலாம் என்று மண் எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லதாவிடம் கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
பரபரப்பு
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தீக்குளிக்க மண்எண்ணெய் பாட்டிலுடன் பெண் தூய்மை பணியாளர் வந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.