அம்மாயி அழைக்கும் திருவிழா


அம்மாயி அழைக்கும் திருவிழா
x

அம்மாயி அழைக்கும் திருவிழா நடந்தது.

திருச்சி

தொட்டியம்:

அம்மாயி அழைக்கும் விழா

தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் 1-ந் தேதியான பொங்கலன்று ஊரில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள மாரியம்மன் கோவிலில் 3 பேரும் காப்பு கட்டி கொண்டனர். இதையடுத்து விரதம் மேற்கொண்டு தினமும் பூஜை நடத்தி வந்தனர்.

காணும் பொங்கலான நேற்று மாலை அந்த சிறுமிகளை மேளதாளங்கள் முழங்க காவிரி ஆற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். அங்கு அம்மாயி அழைக்கும் திருவிழா நடைபெற்றது.

கும்மியடித்த பெண்கள்

விழாவையொட்டி காவிரி ஆற்றில் உள்ள சமதள மணலில் தாத்தா, அம்மாயி உருவங்கள் செய்யப்பட்டன. அதன் முன்பு விரதம் மேற்கொண்ட 3 சிறுமிகளை நிறுத்தி வைத்து தேங்காய், வாழைப்பழம், முளைப்பாரி உள்ளிட்ட பொருட்களை வைத்து 'அம்மாயி'... 'அம்மாயி'... 'எங்களை காக்க வேணும் அம்மாயி' என்று பெண்கள் கும்மியடித்து, குலவை சத்தத்துடன் பாட்டு பாடினர்.

பின்னர் 3 சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு அருள் உண்டாகி ஊரை காப்பது உறுதி என உத்தரவு கொடுத்த பின்பு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணமாக வேண்டியும், திருமணமான சுமங்கலிப் பெண்கள் தங்களது மாங்கல்யம் நிலைத்து இருக்க வேண்டியும் காவிரித்தாயை வழிபட்டனர்.

பின்னர் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ேமலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த புளியோதரை, தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.


Next Story