அரசு பள்ளியில் காய்ச்சல் பரவியது; தலைமை ஆசிரியர் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருச்செங்கோடு அருகே அரசு பள்ளியில் காய்ச்சல் பரவியதால் தலைமை ஆசிரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர்.
திருச்செங்கோடு
அரசு பள்ளியில் காய்ச்சல்
திருச்செங்கோடு அருகே குப்பாண்டம்பாளையம் கிராமம் இடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சாந்தி தலைமை ஆசிரியராகவும், மணிகண்டன் ஆசிரியராகவும் உள்ளனர். இங்கு 7 மாணவர்கள், 10 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் தலைமை ஆசிரியர் சாந்திக்கு காய்ச்சல் ஏற்பட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து 4 மாணவர்களுக்கும் காய்ச்சல் வந்துள்ளது. இதனால் நேற்று பள்ளிக்கு மாணவர்கள் யாரும் வரவில்லை. இந்த தகவலை அறிந்த ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கும் அனுப்பவில்லை.
சிகிச்சை
இந்தநிலையில் எலச்சிபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் வசந்தபிரியா, பள்ளி சிறார் மருத்துவக்குழு டாக்டர் கிருஷ்ணகாந்த் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழு இடையார்பாளையம் வந்து முகாமிட்டு அனைத்து குழந்தைகளையும் பரிசோதனை செய்தனர். மேலும் பள்ளி குழந்தைகள் 17 பேர் வீட்டிற்கு சென்று மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து இடையார்பாளையம் கிராமம் முழுவதும் கொசுப்புழு ஒழித்தல், புகை மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், இருமல், சளி தொந்தரவுகள் உள்ளதா எனவும் கண்டறியப்பட்டு மாத்திரை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமை ஆசிரியை, மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.