சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு ரூ.1¼ கோடி அபராதம்
சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 17 ஆயிரத்து 776 பேருக்கு ரூ.1¼ கோடி அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
சூரமங்கலம்:
டிக்கெட் பரிசோதனை
சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் உத்தரவின் பேரில் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறி பயணம் செய்தவர்கள், மேலும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான லக்கேஜ் கொண்டு சென்றவர்கள் என 17 ஆயிரத்து 776 பேர் பிடிபட்டனர்.
அபராதம்
இவர்கள் மீது ரெயில்வே சட்டவிதிகளின்படி வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு ரூ.1 கோடியே 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறும் போது, ெரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது சட்டபடி குற்றமாகும், அவ்வாறு டிக்கெட் எடுக்காமல் ரெயில்களில் பயணம் செய்தால் அவர்களிடம் இருந்து 2 மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும். மேலும் சிறை தண்டனையும் விதிக்கப்படும், எனவே பயணிகள் தவறாமல் ரெயிலில் பயணம் செய்யும் போது டிக்கெட் எடுத்து பயணம் செய்து ரெயில்வே துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றனர்.