கடலூரில் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூரில் குடிபோதையில் பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து நேற்று காலை கடலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் எதிரே வந்த போது, அவ்வழியாக சென்ற காரை இடிப்பது போல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த காரை ஓட்டி வந்த நபர், பஸ்சை மறித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையிலான போலீசார், அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது தனியார் பஸ் டிரைவர் மதுபோதையில் இருப்பது தெரிந்தது. உடனே இன்ஸ்பெக்டர் அமர்நாத், மதுபோதையில் இருப்பதை கண்டறியும் கருவி மூலம் டிரைவரிடம் சோதனை செய்ததில், அவர் போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனியார் பஸ்சை ஓட்டி வந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.