காணாமல் போன கணவரை ஆஜர்படுத்த கோரிய பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்-மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு
காணாமல் போன கணவரை ஆஜர்படுத்த கோரிய பெண்ணுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்
தேனி மாவட்டத்தை சேர்ந்த கலாதேவி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில், எனது கணவர் அழகுமுருகன். இவர் வருசநாட்டில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இது தொடர்பாக கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எனது கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை. எனவே, காணாமல் போன எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் ரமேஷ், நிர்மல்குமார் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போன போலீஸ் ஏட்டு அழகுமுருகனை தேடுவதற்காக சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.
இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொடர்ந்து பணிக்கு வராததால், கடந்த 2017-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்த தகவல் மனுதாரருக்கு நேரில் வழங்கப்பட்டுள்ளது. சட்ட விதிகளின்படி, ஒருவர் காணாமல் போய் 7 வருடங்களை கடந்தும் அவரை கண்டறிய முடியாவிட்டால் அவர் இறந்ததாக கருதப்படுவார். இந்த தகவலும் மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை. வழக்கு தொடர்ந்து, கோர்ட்டு நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.