எய்ட்ஸ் உள்ளதாக தவறான தகவல்:தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம்
எய்ட்ஸ் உள்ளதாக தவறான தகவல் தெரிவித்ததால் தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது71). இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக சென்றார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றனர். அதற்கு முன்பாக ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும் என கூறினர். பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியிலும் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எய்ட்ஸ் நோய் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணசாமி கோவை நுகர்வோர் கோர்ட்டில் தனியார் கண் ஆஸ்பத்திரி மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விரைவான விசாரணைக்கு, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் ராமராஜ் தனியார் கண் மருத்துவமனை கவனக்குறைவுடன் செயல்பட்டு, அலட்சியமான சேவை புரிந்து உள்ளதால், வழக்கு தாக்கல் செய்தவருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில் 14 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இவற்றில் 5 வழக்குகளில் தனியார் கண் மருத்துவமனை உள்பட வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.