புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 50 கடைகளுக்கு அதிகாரிகள் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். உரிமம் இன்றி நடத்தி வந்த 2 கடைகள் மூடப்பட்டன.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 50 கடைகளுக்கு அதிகாரிகள் தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்தனர். உரிமம் இன்றி நடத்தி வந்த 2 கடைகள் மூடப்பட்டன.

அதிரடி ேசாதனை

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உணவு பாதுகாப்புத்துறையினருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட போலீசார் உணவுப் பாதுகாப்புத்துறையினருடன் இணைந்து கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் நடத்திய சோதனையில் சுமார் 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சோதனையில் கிலோ கணக்கில் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடைகள் மூடல்

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ராமநாதபுரம் நகர் சிகில்ராஜ வீதி பகுதியில் சுரேஷ் என்பவரின் கடை ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக உணவுப் பாதுகாப்புத்துறையினர் அந்த கடையில் சோதனை மேற்கொண்டபோது கடை உரிமம் இன்றி நடத்தப்பட்டு வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன் கடையை மூடினர்.

இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் நரிப்பையூர் திரவியபுரம் பகுதியில் கதிரேசன் என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையும் உரிமம் இன்றி நடத்தப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து கடை மூடப்பட்டது. உரிமம் பெற்ற பின்னர்தான் கடையை திறக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 ஆயிரம் அபராதம்

இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போலீசார் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்படி நாங்கள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். இவ்வாறு கடந்த 3 நாட்களில் 50 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கட்டாவிட்டால் கடை மூடப்படும். புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் முதல்தடவை ரூ.5 ஆயிரமும், 2-வது தடவை ரூ.10 ஆயிரமும், 3 வது தடவை ரூ.20ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். அதன்பின்னரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் கடை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும். மாவட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கையை தவிர்க்கும் வகையில் அரசின் உத்தரவின்படி புகையிலை பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது. அதேபோன்று கடைகளுக்கு உரிமம் பெற்றுதான் கடைகளை நடத்தவேண்டும். உரிமம் இல்லாத கடைகள் மூடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story