சிகிச்சையில் குறைபாடு: தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.9 லட்சம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


சிகிச்சையில் குறைபாடு: தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.9 லட்சம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

சேவை குறைபாட்டை சுட்டிகாட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

சேவை குறைபாட்டை சுட்டிகாட்டி தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரசவம்

நாகர்கோவில் இளங்கடை ஆர்.சி. பரதர் தெருவை சேர்ந்தவர் அருள்ஜோதி, மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரா ஹெலன். இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு இந்திரா ஹெலனை பிரசவத்திற்காக இளங்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது இந்திரா ஹெலனுக்கு திடீரென ரத்தபோக்கு அதிகமானதால் அவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட இந்திரா ஹெலன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ரூ.9 லட்சம் நஷ்டஈடு

முன்னதாக இளங்கடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி உரிய சிகிச்சை அளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான இந்திரா ஹெலன் தனக்கு ரூ.19.50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கடந்த 2010-ம் ஆண்டு குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்து சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.9 லட்சம் அபராதம் விதித்து அதை நஷ்ட ஈடாக இந்திரா ஹெலனுக்கு வழங்க வேண்டும் என்றும், அந்த தொகைக்கு 2010-ம் ஆண்டு முதல் 6 சதவீதம் வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் இந்திரா ஹெலன் மருத்துவத்துக்கு செலவு செய்த தொகை ரூ.7.21 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த தொகையை 4 மாதத்திற்குள் வழங்கவில்லை என்றால் அபராத தொகைக்கு 9 சதவீதம் வட்டியுடன் பாதிக்கப்பட்ட இந்திரா ஹெலனுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story