சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் கோட்டார் பகுதியில் உள்ள ஒரு கடையில் பிளாஸ்டிக் உபயோகம் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து அதிகாரிகள் ராஜ்குமார், பகவதி பெருமாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த மற்றொரு கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கோர்ட்டு ரோட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சூப்பர் மார்க்கெட் மற்றும் 2 கடைகளிலும் சேர்த்து மொத்தம் 250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் கே.பி.ரோட்டில் அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்த ஒரு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.