நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்


நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பணத்தை செலுத்திய பிறகும் சான்றிதழ் வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

பணத்தை செலுத்திய பிறகும் சான்றிதழ் வழங்காத நிதி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நிதி நிறுவனம்

குழித்துறை அருகே கல்பாலத்தடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கி கார் வாங்கினார். அந்த கடனுக்காக மாதந்தோறும் காசோலை மூலம் தவணைகளை கட்டி முடித்துள்ளார். கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும் கடன் இல்லை என்ற சான்றிதழை நிதி நிறுவனம் வழங்கவில்லை. மேலும் கூடுதல் தொகை கட்ட வேண்டி உள்ளது என நிதி நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் வேறு வழியின்றி நிதி நிறுவனம் கூறியபடி சவுந்தர்ராஜ் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பின்பும் கணக்கை முடிக்க இன்னும் பணம் செலுத்த வேண்டும் என்றும், சவுந்தர்ராஜ் சென்னைக்கு நேரடியாக வர வேண்டும் என்றும் நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் விளக்கம் அளிக்க வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

அபராதம்

ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சவுந்தர்ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு அபராதமாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் ஏற்கனவே கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 724 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதோடு கடன் இல்லை என்ற சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


Next Story