தனியார் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
தனியார் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள சிந்தன்விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்திடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். வாங்கிய சில நாட்களிலேயே எந்திரங்கள் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து எந்திரங்களை சரி செய்துதர சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.29 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து வக்கீல் மூலம் சசிகுமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சசிகுமார், குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர். தீர்ப்பில், மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.10 ஆயிரம் மற்றும் பழுதான எந்திரங்களை சரி செய்து வழங்க வேண்டும். மேலும், வழக்கு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.