18,860 பேரிடம் ரூ.1.32 கோடி அபராதம் வசூல்
சேலம் கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 18,860 பேரிடம் ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்த 18,860 பேரிடம் ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சோதனை
ரெயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சீனிவாஸ் உத்தரவின்பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச்சீட்டு பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ரூ.1.32 கோடி அபராதம்
இந்த சோதனையில் கடந்த மாதத்தில் (ஜூலை) டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 18 ஆயிரத்து 860 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது, 'ரெயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரியது. அவ்வாறு பயணிப்பவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் நடத்திய சோதனையில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.1.32 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது' என்றார்.