பர்னிச்சர் கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
பர்னிச்சர் கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பர்னிச்சர் கடையில் ரூ.24 ஆயிரம் முன்பணம் செலுத்தி அலுவலகங்களுக்கு பயன்படுத்தும் மேஜை ஒன்றை செய்து தருமாறு கூறினார். பணத்தை பெற்றுக் கொண்ட பர்னிச்சர் கடை உரிமையாளர் 20 நாட்களில் மேஜையை செய்து தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி மேஜையை குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்து கொடுக்கவில்லை. இதனால் துரைராஜ் வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனாலும் உரிய பதில் இல்லை. இதனை தொடர்ந்து துரைராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் பர்னிச்சர் கடையின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட துரைராஜ் ஏற்கனவே செலுத்திய ரூ.24 ஆயிரம் மற்றும் அபராதமாக ரூ.15 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.