வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
நகை கடனுக்கு கூடுதல் வட்டி வசூலித்த வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
நகை கடனுக்கு கூடுதல் வட்டி வசூலித்த வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
விவசாய நகை கடன்
குமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ். இவர் வேர்க்கிளம்பி பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகைக்கடன் பெற்றிருந்தார். பின்னர் கடன்ெதாகைைய முறையாக செலுத்தினார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452 அதிகமாக வட்டி வசூலிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஞானதாஸ் வங்கியில் புகார் அளித்தார். ஆனாலும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டிப்பணம் திரும்ப கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஞானதாஸ் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.15 ஆயிரம் அபராதம்
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட ஞானதாசுக்கு நஷ்டஈடு ரூ.15 ஆயிரம், கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டிப்பணம் ரூ.13,452 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.33,452-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.