சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நிதி நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பிரபல தனியார் நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்:
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பிரபல தனியார் நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நிதி நிறுவனம்
குமரி மாவட்டம் இரவிப்புதூர்கடையை சேர்ந்தவர் ஜெய்னி லி போன்ஸ் (வயது 47), வியாபாரி. இவர் பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் கடனாக வாங்கி இருந்தார். அந்த கடனுக்காக மாதந்தோறும் ரூ.19 ஆயிரம் அந்த நிதிநிறுவனத்துக்கு செலுத்தினார். அந்த வகையில் 36 தவணைகளாக பணத்தை ஜெய்னி லி போன்ஸ் கட்டி முடித்துள்ளார்.
கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகும் கடன் இல்லை என்ற சான்றிதழை நிதி நிறுவனம் வழங்கவில்லை. இதனால் ஜெய்னி லி போன்ஸால் வேறு எந்த நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற முடியவில்லை. மேலும் தொகை கட்ட வேண்டி உள்ளது என நிதி நிறுவனம் கூறி உள்ளது. வேறு வழியின்றி நிதிநிறுவனம் கூறியபடி தொகை ரூ.25,658-ஐ அவர் கட்டினார். மேலும் இதுதொடர்பாக வக்கீல் மூலம் நிதிநிறுவனம் விளக்கம் அளிக்க நோட்டீசும் அனுப்பப்பட்டது. ஆனால் நிதிநிறுவனத்திடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.
ரூ.20 ஆயிரம் அபராதம்
இதனால் ஜெய்னி லி போன்ஸ் குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர்.
தீர்ப்பில், நிதிநிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோரிடம் தவறாக பெறப்பட்ட ரூ.25,658 மற்றும் அபராதமாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.