வங்கிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்
சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
நாகர்கோவில்,
சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயா மாரீஸ் ராஜ். இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள பணம் செலுத்தும் எந்திரம் மூலம் அவரது மனைவியின் வங்கி கணக்கிற்கு ரூ.4 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அந்த பணம் சென்று சேரவில்லை.
உடனே ஜெயா மாரீஸ் ராஜ் கன்னியாகுமரியில் உள்ள வங்கிக்கு சென்று எழுத்து மூலமாக புகார் கொடுத்தார். ஆனால் செலுத்திய பணம் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதன்பிறகும் உரிய பதில் கிடைக்கவில்லை.
ரூ.24 ஆயிரம் அபராதம்
இதனைதொடா்ந்து ஜெயா மாரீஸ் ராஜ், குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்கனவே வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.4 ஆயிரம், நஷ்ட ஈடு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.24 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.