தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில்:
சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி
நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சார்லின் செல்வ ஜோஸ். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது ஓய்வூதிய கணக்கை வைத்துள்ளார். அதோடு தனது நண்பரான ராமையா என்பவர் பெற்ற கடனுக்கு ஜாமீன்தாரராக கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையே கடன் பெற்ற ராமையா திடீரென இறந்து விட்டதால் அவருடைய கடனில் பாக்கித் தொகை நிலுவையில் இருந்துள்ளது.
அதன் பிறகு சார்லின் செல்வ ஜோஸ் தனது ஓய்வூதிய கணக்கின் அடிப்படையில் இந்த வங்கியில் கடன் பெற்றுள்ளார். ஆனால் எவ்வித முன்னறிவிப்புமின்றி இறந்து போன ராமையாவின் கடனில் நிலுவையில் இருந்த பாக்கித் தொகை ரூ.79,841-ஐ வங்கி எடுத்து விட்டது.
ரூ.25 ஆயிரம் அபராதம்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சார்லின் செல்வ ஜோஸ் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடாக ரூ.25 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு தொகை மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.79,841 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.