மாநகராட்சி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய தகவல் வழங்காத மாநகராட்சி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகை மனு கொடுத்தவருக்கு காசோலையாக அனுப்பப்பட்டது.
நாகர்கோவில்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய தகவல் வழங்காத மாநகராட்சி அலுவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகை மனு கொடுத்தவருக்கு காசோலையாக அனுப்பப்பட்டது.
தகவல் அறியும் உரிைம சட்டம்
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயின் ஷாஜி. இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டிருந்தார். ஆனால் அதற்கு பொது தகவல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உரிய பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர் இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் உரிமை ஆணையம், உரிய பதில் வழங்காத சம்பந்தப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பிடித்தம் செய்து ஜெயின் ஷாஜிக்கு வழங்க உத்தரவிட்டது.
காசோலை அனுப்பி வைப்பு
அதன்படி சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் இருந்து ரூ.25 ஆயிரம் பிடித்தம் செய்து அதற்கான காசோலை ஜெயின் ஷாஜிக்கு மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் எடுத்த தொடர் முயற்சிக்கு தற்போது தான் தீர்வு கிடைத்துள்ளது. பொதுவாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்கிறவர்கள் ஓரிருமுறை முறையீட்டு கடிதங்களை அனுப்பி விட்டு ஓய்ந்து விடுவார்கள். இதனை அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர். எனவே தொடர்ந்து கடிதங்களை அனுப்பி மேல்முறையீடு செய்து அதனை முறையாக பின் தொடர்ந்தால் இதுபோன்றதொரு நடவடிக்கை இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.