மேல்மலையனூர் அருகேமலை அடிவாரத்தில் தீ விபத்துமரங்கள், செடிகள் கருகின
மேல்மலையனூர் அருகே மலை அடிவாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரங்கள், செடிகள் கருகின.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே கோட்டப்பூண்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட மலை உள்ளது. இந்த மலையில் மருத்துவ குணம் கொண்ட ஏராளமான செடி, கொடிகள், மரங்கள் உள்ளன. மேலும் அங்கு வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மலையின் அடிவாரப்பகுதியில் வளர்ந்திருந்த செடிகள் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மலையில் பரவியது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள் இதுபற்றி மேல்மலையனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீவிபத்தில் செடி, கொடிகள். சிறிய மரங்கள் தீயில் கருகி சாம்பலாகிவிட்டன. தீவிபத்து பற்றி அறிந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர். மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.