பட்டாசு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து; 3 தொழிலாளர்கள் படுகாயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பட்டாசு நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே தனியார் பட்டாசு நிறுவனத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
திடீர் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலம் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு மருந்து நிறுவனம் அமைந்துள்ளது. வெடி மருந்துகள் மிக்சிங் செய்யப்பட்டு பார்சல்களாக மாற்றப்பட்டு இங்கிருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் 9-வது அறையிலுள்ள 'பால்பில்' எனப்படும் மிஷினில் விரிசல்கள் ஏற்பட்டு பழுதடைந்தது.
இதையடுத்து நேற்று அந்த எந்திரத்தை சிவகாசி அனுப்பன்குளத்தை சேர்ந்த சுப்பு மகன் பாண்டி (வயது 28), மீனம்பட்டியை சேர்ந்த பாண்டியன் (60), திருத்தங்கலை சேர்ந்த குமார் (55) உள்ளிட்ட மூன்று தச்சு தொழிலாளர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மரப்பலகையிலான அந்த எந்திரத்தின் மீது உப்புத்தாள் கொண்டு தேய்த்த போது எழுந்த வெப்பத்தால் அந்த எந்திரத்தின் உட்பகுதிகளில் சிறிதாக ஒட்டிக்கொண்டு இருந்த வெடி மருந்து பொருட்கள் திடீரென தீப்பற்றியது.
3 பேர் படுகாயம்
இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட மற்ற பணியாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்சாம்ராஜ், ரேணுகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விசாரணை நடத்தினர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.