சங்கராபுரத்தில் வளையல் கடை தீப்பிடித்து எரிந்தது ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்
சங்கராபுரத்தில் வளையல் கடை தீப்பிடித்து எரிந்ததில் ரூ.7 லட்சம் பொருட்கள் சேதமானது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் நகைக்கடை வீதியை சேர்ந்தவா் டூங்கர் சிங் மகன் விக்ரம் சிங் (வயது 28). இவர் சங்கராபுரம் கடைவீதியில் வாடகை கட்டிடத்தில் வளையல் கடை நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் விக்ரம்சிங் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கடையில் இருந்து புகை வெளியேறியது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி விக்ரம் சிங்கிற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அவர் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடை தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது.
போலீசார் விசாரணை
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.