பல்லாவரம் அருகே ஊதுபத்தி நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
பம்மல்,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அருகே உள்ள நாகல்கேணி கண்ணாயிரம் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் ஊதுபத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் ஊழியர்கள் சிலர் மதிய சாப்பாட்டுக்கு சென்றுவிட 4 பெண்கள் உள்பட 5 ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தீ விபத்து
அப்போது கம்பெனியில் உள்ள 2-வது யூனிட்டில் ஊதுபத்தி தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மற்றும் ஊதுபத்திகள், கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் அதிகளவு சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனை கண்டு ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர். பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண் எதிரேயே தீப்பிடித்து எரிவதை பார்த்த அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மயக்கம் அடைந்தார். அவரை உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
4 மணிநேரம் போராட்டம்
கடுமையான வெயில் அடித்ததால் தீ கட்டுக்கடங்காமல் பரவி கரும்புகை மூட்டம் எழுந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை தெற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராபின் காஸ்ட்ரோ தலைமையில் தாம்பரம் தீயணைப்பு பயிற்சி நிலையம், மேடவாக்கம், கிண்டி, அசோக் நகர், தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஊதுபத்தி நிறுவனத்தில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலுமாக அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஊதுபத்தி, சாம்பிராணி, ஊதுபத்தி தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின.
தீ விபத்து ஏற்பட்ட ஊதுபத்தி நிறுவனத்தில் கருணாநிதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.