நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி அணைத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி அணைத்தனர்.
வலம்புரிவிளை குப்பை கிடங்கு
நாகர்கோவில் பீச் ரோட்டில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து காட்சி அளிக்கின்றன. இதில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அந்த குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதற்கிடையே நாகர்கோவில் மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் வலம்புரி விளை குப்பை கிடங்கில் குப்பைகள் சேர்ந்த வண்ணம் உள்ளது.
தீ விபத்து
இந்த குப்பை குவியலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்தது. இதை கண்ட பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவியது. இதனால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
பின்னர் சுமார் 5 மணி நேரம் போராடி பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வாகனத்தை ஓட்டினர்.
---