தொழிலாளி வீட்டில் திடீர் தீ விபத்து
ஏரலில் தொழிலாளி வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
ஏரல்:
ஏரல் திருச்செந்தூர் ரோட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 62). தச்சு தொழிலாளி. இவர் மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். நேற்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் இவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அலுவலர்கள் இசக்கி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், அங்கிருந்த கம்ப்யூட்டர், மடிக்கணினி, துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.