மின்கம்பத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ


மின்கம்பத்தில் கொழுந்து விட்டு எரிந்த தீ
x

கொடைக்கானலில், மின்கம்பத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் மிதமான மழை பெய்தது. இந்தநிலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமான கலையரங்கம் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மள, மளவென பரவிய தீ, ½ மணி நேரம் கொழுந்து விட்டு எரிந்தது. இதனைக்கண்ட அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மின்கம்பத்தில் எரிந்த தீயை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக, அப்பகுதியில் மின்சார வினியோகம் தடைபட்டது. கடந்த 10 தினங்களில் மட்டும் கொடைக்கானலில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மின்கம்பங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சாரத்துறை பணியாளர்கள் கூறும்போது, அதிகமான மின் இணைப்பு கொடுக்கப்பட்டதன் காரணமாகவும், உயர் அழுத்த மின்சாரம் பாய்வதாலும் மின்கம்பங்களில் தீப்பற்றி எரிந்து வருவதாக தெரிவித்தனர். எனவே மின்சாரத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி, மின்கம்பத்தில் பற்றி எரியும் தீயை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story