திருவண்ணாமலையில் ஒருவாரமாக குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ
திருவண்ணாமலையில் உள்ள குப்பை கிடங்கில் தொடர்ந்து ஒருவாரமாக தீ எரிவதால் நச்சுப்புகையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள குப்பை கிடங்கில் தொடர்ந்து ஒருவாரமாக தீ எரிவதால் நச்சுப்புகையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குப்பை கிடங்கு
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் நகராட்சிக்கான குப்பை கிடங்கு உள்ளது. நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இங்கு கொட்டப்படுகிறது. இந்த இடத்தில் பல வருடமாக குப்பை கிடங்கு செயல்பட்டு வருவதால் இங்கு மலை போல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
இந்த குப்பை கிடங்கு குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் உள்ளதாலும், கிரிவலப்பாதையில் அமைந்து உள்ளதாலும் இதனை அகற்ற வேண்டும் என பல வருடங்களாக பொதுமக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பை பிரித்தெடுத்து அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ஒரு வாரமாக எரியும் தீ
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி நள்ளிரவு முதல் மர்மநபர்கள் வைத்த தீயால் குப்பை கிடங்கு பற்றி எரிந்து வருகிறது. கிடங்கில் எரியும் தீயை அணைக்க நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ அணைகக்கப்படாததால் ஒரு வாரமாக பற்றி எரிந்து நச்சுப்புகை வெளியேறி வருகிறது.
இதனால் வரும் போளூர் சாலை, அவலூர்பேட்டை சாலை குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.