குமரி காடுகளில் 4 நாட்களாக எரியும் தீ
குமரி காடுகளில் 4 நாட்களாக எரியும் தீயை வனத்துறையினர் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
குலசேகரம்:
குமரி காடுகளில் 4 நாட்களாக எரியும் தீயை வனத்துறையினர் அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தொன்மையான காடு
குமரி மாவட்ட காடுகள் மிகவும் தொன்மையானதாகும். மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் 30.2 சதவீதம் காடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தெற்குமலை, தாடகை மலை, பொதிகை மலை, மகேந்திரகிரி மலை, வீரப்புலி, வேளி மலை, குலசேகரம், கிளாமலை, அசம்பு மலை என 9 பாதுகாக்கப்பட்ட காடுகள் களியல், குலசேகரம், வேளிமலை, அழகியபாண்டிய புரம், பூதப்பாண்டி என 5 வனச்சரகங்களாக சுமார் 50,486 எக்டர் பரப்பில் உள்ளன.
எப்போதும் ஈரம் நிறைந்து காணப்படும் பசுமை மாறாக்காடுகள் முதல் வறட்சியைத் தாங்கி வளரும் முள்காடுகள் வரை 14 வகையான காடுகள் இம்மாவட்டத்தில் உள்ளன. தேக்கு, ஈட்டி, சந்தனம், மருது, வேங்கை என 600- க்கும் மேற்பட்ட வகையான மரங்கள் உள்ளன. யானை, சிறுத்தை, வரையாடு, கரடி, மிளா, காட்டுப்பன்றி, பெரிய அணில், கருமந்தி, சிங்கவால் மந்தி என 30-க்கும் மேற்பட்ட பாலூட்டும் விலங்குகளும், 14 வகையான இடம் பெயரும் பறவைகள் உள்பட 100 வகையான பறவையினங்கள், ஊர்வன பிராணிகளும், உயிரைக்காக்கும் மூலிகைகளும் இக்காடுகளில் உள்ளன. குமரி மாவட்ட வனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 48 காணி பழங்குடி குடியிருப்புகள் மற்றும் ரப்பர் கழக குடியிருப்புகள் உள்ளன.
4 நாட்களாக எரியும் தீ
இந்த நிலையில் குமரி மாவட்ட காடுகளில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கோதையாறு, குற்றியாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தீ எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் காட்டில் உள்ள விலங்குகள், பறவையினங்கள் மற்றும் மரங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சுற்றுச் சூழலுக்கும் பெரும் அபாயம் ஏற்படுத்தியுள்ளது.
கோடை காலம் தொடங்குவற்கு முன்பாகவே குமரி காடுகளில் ஏற்பட்டுள்ள இந்த தீ வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.
நடவடிக்கை இல்லை
காடுகளில் வெயில் காலங்களில் தீ எரியும் என்ற நிலையில் முன்கூட்டியே அதனைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதுண்டு. குறிப்பாக தீ தடுப்பு காவலர்களை நியமித்து காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களை தடுப்பது, மற்றும் தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துவது போன்ற பணிகள் முழுவீச்சில் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.
மேலும் இயற்கையாக தீ எரியும் போது அதனை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் ஊழியர்கள் மற்றும் தீ தடுப்பான்களை வனத்திற்குள் கொண்டு சென்று தீயை தடுக்கும் பணிகளும் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.
அணைக்க வேண்டும்
இது குறித்து குலசேகரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
கோதையாறு வனப்பகுதிகள் கடந்த சில நாட்களாக தீயில் எரிகிறது. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது காட்டுத் தீயை கண்காணிக்கவும், அதனைத் தடுக்கவும் வெளி நாடுகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக செயற்கைக்கோள் தொழில் நுட்பம் மூலம் காடுகளில் தீ ஏற்படுவது கண்காணிக்கப்படுகின்றது. மேலும் காடுகளில் ஏற்படும் தீ நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் அணைக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்திலும் இது போன்ற தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி காடுகளில் தீயை அணைக்க வேண்டும். மேலும் காடுகளில் மனிதர்கள் மூலம் தீ ஏற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வனத்துறை தயங்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.