கூரை வீட்டிற்கு தீ வைப்பு
கலசபாக்கம் அருகே கூரை வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதில் பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது.
கலசபாக்கம்
கலசபாக்கம் அருகே காஞ்சி சுண்ணாம்பு கால்வாய் பகுதியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 62), விவசாயி. இவருக்கு சொந்தமான கூரை வீட்டை நேற்று இரவு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.
இதனால் வீடு முழுவதும் தீ பரவியது. இதனை அறியாமல் உள்ளே தூங்கி இருந்த வேடியப்பன் குடும்பத்தினரை அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ஓடிச் சென்று உள்ளே இருந்தவர்களை வெளியில் அழைத்து வந்தார்.
இதுகுறித்து செங்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு குழுவினர் வருவதற்குள் குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
இதனால் வீட்டில் வைத்திருந்த பத்திரம், மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்தும் தீயில் கருகியது.
இச்சம்பம் குறித்து வேடியப்பன் கடலாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.