குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மீனவர்


குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மீனவர்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை

3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் மீனவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் குடியிருப்பு பகுதி நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 62). மீனவரான இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.பின்னர் அவர் தனது குடும்பத்தினர் மீது மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

தர்ணா போராட்டம்

இதை தொடர்ந்து லட்சுமணன் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பாலாஜி ஆகியோர் லட்சுமணனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

பூம்புகாரில் உள்ள மீனவர்கள், வெளியூர் சென்று மீன்பிடிக்க கிராம பஞ்சாயத்தார் ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். நான் வெளியூரில் தங்கி மீன்பிடித்து வந்த காரணத்தால், ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தனர். மேலும் ஊரில் தனது குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா போட்டு அறிவித்திருந்தனர்.ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பஞ்சாயத்தார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடர்ந்து பலமுறை கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்து உள்ளேன்.

வருமானம் இன்றி பாதிப்பு

கடந்த 3 ஆண்டுகளாக எனது குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். எனது குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டம்கூட விற்பனை செய்வதில்லை. இதுதொடர்பாக போலீசார் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பல ஆண்டுகளாக வருமானத்திற்கு வழி இன்றி குடும்பத்துடன் தவித்து வருகிறேன் என்றார்.

பரபரப்பு

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து லட்சுமணன் குடும்பத்தினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.3 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் மீனவர் தனது குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story