ஜவ்வாதுமலை கோடைவிழாவில் பார்வையாளர்களை கவர்ந்த மலர் கண்காட்சி
ஜவ்வாதுமலை கோடைவிழாவில் மலர் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் என பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் நடந்தன. காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரங்களை அவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
ஜவ்வாதுமலை கோடைவிழாவில் மலர் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் என பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் நடந்தன. காய்கறிகளால் செய்யப்பட்ட அலங்காரங்களை அவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
23-வது கோடைவிழா
ஜமுனாமரத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கோைட விழா நடைபெற்று வருகிறது. கொரோனாவை முன்னிட்டு 3 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி 3 ஆண்டுக்கு பின் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கோடைவிழாவில் கலந்து கொள்வதற்காகவும் பார்வையிடுவதற்காகவும் காலை முதலே ஜமுனாமரத்தூரை நோக்கி ஏராளமானோர் வாகனங்களிலும் பஸ்களிலும் வந்த வண்ணம் இருந்தனர். மலை கிராமங்களில் இருந்தும் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் அங்கு வரத்தொடங்கினர்.
விழாவையொட்டி ஜவ்வாதுமலையில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மலர் கண்காட்சி
மேலும் தோட்டக்கலைத்துறையின் சார்பில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள், காய்கறிகளால் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. இதில் மலர்களால் கிரிக்கெட் மைதானம், ரோஜா பூக்களாலான இதயம் சின்னங்கள் (காதல் அடையாளம்), பாகற்காய் மூலம் முதலை, கத்தரிக்காய் மூலம் மயில் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இவற்றின் முன்பு நின்று ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்போனில் போட்டோ மற்றும் செல்பியை போட்டி போட்டு எடுத்து கொண்டனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கைவினை பொருட்கள் விற்பனையகம், வேளாண்மை துறையில் வேளாண் கருவிகள் கண்காட்சி போன்றவை அமைக்கப்பட்டு இருந்தது.
விளையாட்டு போட்டிகள்
மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மலை வாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.
அத்துடன் வாலிபால், கபடி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களால் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள், பொருட்களின் விற்பனை கடைகள் ஜவ்வாதுமலை உள்ளூர் சந்தை அமைக்கப்பட்டு இருந்தது.
இவற்றை ஏராளமான மக்கள் பார்வையிட்டு தேன் போன்றவற்றை வாங்கி சென்றனர்.
விழாவை முன்னிட்டு கோடைவிழா நடைபெற்ற மைதானத்தின் அருகில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், ராட்சத ராட்டினம் போன்றவை அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) கோடை விழா நிறைவு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதனையொட்டி ஜமுனாமரத்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.