வேலூரில் இருந்து காட்பாடிக்கு நேரடியாக செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும்
வேலூரில் இருந்து காட்பாடிக்கு நேரடியாக செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் வணிகர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வேலூரில் இருந்து காட்பாடிக்கு நேரடியாக செல்ல மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங்கிடம் வணிகர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வணிகர்களுடன் சந்திப்பு
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் நேற்று வேலூரில் வணிகர் சங்க நிர்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது வணிகர் சங்க தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம்.குமார், மாநகர செயலாளர் அசோகன், இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், மொத்த ஜவுளி வியாபாரிகள் சங்க செய்தி தொடர்பாளர் சுபாஷ் மற்றும் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள், பா.ஜ.க. சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
மேலும் வணிகர்கள் சங்கம் சார்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டது. அப்போது வணிகர்கள் கூறியதாவது:-
மேம்பாலம்
வேலூரில் போக்குவரத்து பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. வேலூரில் இருந்து காட்பாடிக்கு நேரடியாக செல்லும் வகையில் நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து முத்துமண்டபம் வரை தேசிய நெடுஞ்சாலையின் மேலே செல்லும் வகையில் மேம்பாலம் ஒன்று அமைக்க வேண்டும். கிரீன் சர்க்கிள் அளவை குறைக்க வேண்டும். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கொண்டு வர வேண்டும்.
சித்தூர்- கடலூர் சாலையை அகலப்படுத்துவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். காட்பாடியில் இருந்து சத்துவாச்சாரிக்கு பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை வேண்டும்.
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு செல்லும் வாகனங்கள் வேலூர் நகருக்குள் வந்து செல்கிறது. இதை தடுக்கும் வகையில் புதிதாக சாலை அமைக்க வேண்டும்.
வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலையில் கண்ணமங்கலம் அருகே சுங்கச்சாவடி மூலம் வரி வசூலிக்கப்படுகிறது. சாலை பணிகள் மேற்கொள்ளாமலே வசூல் செய்யப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். வேலூருக்கு கல்விக்காக, மருத்துவத்திற்காகவும் ஏராளமான வெளி மாநிலத்தவர்கள் வருகை தருகின்றனர். எனவே வேலூர் விமான நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
விபத்து
மேல்மொணவூரில் 35 ஏக்கரில் வணிகர்களுக்கான மார்க்கெட் அமைய உள்ளது. மார்க்கெட் அமைந்தால் பொதுமக்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் வந்து செல்வார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலை கடக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.