பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்
ஆண்டியப்பனூர் பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆண்டியப்பனூர் பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார், கூட்டத்தில் வேளாண்மை, காவல், மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 399 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருநங்கைகள் நலவாரியம் மூலம் 5 திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.
தரைப்பாலம் கட்ட வேண்டும்
கூட்டத்தில் ஆண்டியப்பனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ஆண்டிப்பனூர் ஊராட்சி, ஐயங்கொல்லை கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கனமழை காரணமாக, அங்குள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆற்றை கடக்க வேண்டுமென்றால், 5 கி.மீ. வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே, எங்கள் பகுதியில் தரைப்பாலம் ஒன்று கட்டி தரவேண்டும். என கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முல்லை அளித்த மனுவில், கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் 30 விவசாய மின்மோட்டார்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், விவசாய பாசனத்துக்கும், ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கும் 24 மணி நேரமும் முன்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) வில்சன் ராஜசேகர், (வளர்ச்சி) ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.