ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம்: நாகர்கோவில் காசிக்கு உதவிய வெளிநாட்டை சேர்ந்த நண்பர் அதிரடி கைது


ஆபாச படம் எடுத்து மிரட்டிய விவகாரம்: நாகர்கோவில் காசிக்கு உதவிய வெளிநாட்டை சேர்ந்த நண்பர் அதிரடி கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு உதவிய வெளிநாட்டை சேர்ந்த அவரது நண்பரை போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு உதவிய வெளிநாட்டை சேர்ந்த அவரது நண்பரை போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாலியல் புகார்

நாகர்கோவில் கோட்டார் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்க பாண்டியன். இவருடைய மகன் காசி (வயது 28). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர், நாகர்கோவில் பகுதியை சோ்ந்த 27 வயதுடைய இளம்பெண், பள்ளி மாணவி என அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்தனர். தங்களுடன் நெருங்கி பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அந்த புகாரில் இளம்பெண்கள் கூறியிருந்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த புகார்கள் தொடர்பாக காசி மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த வகையில் அவர் மீது மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சி.பி.சி.ஐ.டி. போலீசார்

இந்த வழக்குகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காசியின் நண்பர் ஒருவரை கைது செய்தனர். மேலும் காசிக்கு உதவும் வகையில் பல்வேறு சாட்சியங்களை அழித்ததாக அவரது தந்தை தங்க பாண்டியனும் கைது செய்யப்பட்டார். பின்னர் காசி மற்றும் அவருடைய தந்தை தங்க பாண்டியன் ஆகியோர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

காசி மீது கந்துவட்டி, போக்சோ உள்பட 6 வழக்குகளுக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள 2 வழக்குகளுக்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

காசியின் நண்பர்

அதே சமயத்தில் பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காசியின் நண்பர் கவுதம் (29) என்பவரும் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் காசிக்கு உதவி புரிந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் கவுதம் வெளிநாட்டில் இருந்ததால் அவரை கைது செய்ய முடியவில்லை.

எனவே அவர் எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் உடனே கைது செய்வதற்காக அனைத்து விமான நிலையங்களும் கவுதமனின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. அதோடு திருவனந்தபுரம் விமான நிலையத்திலும் கவுதம் தொடர்பான தகவல்கள் கொடுக்கப்பட்டு அவர் எப்போது வந்தாலும் உடனே தகவல் தெரிவிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியிருந்தனர்.

கைது

இந்த நிலையில் கவுதம் நேற்று குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு சென்றனர்.

பின்னர் கவுதம் வந்ததும் அவரை அதிரடியாக கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் 2½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிலையில் கவுதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story