குமரி நடுக்கடலில் விசைப்படகில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பல்


குமரி நடுக்கடலில் விசைப்படகில் மோதிவிட்டு நிற்காமல் சென்ற வெளிநாட்டு கப்பல்
x

நடுக்கடலில் குமரி விசைப்படகு மீது வெளிநாட்டு கப்பல் மோதியதில் பரிதவித்த 14 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டம் குளச்சல் மரமடிய தெருவை சேர்ந்தவர் ரெஸ்லின் டானி.

இவர் கடந்த 12-ந் தேதி விசைப்படகு மூலம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றார். படகில் 14 பேர் இருந்தனர்.

கப்பல் மோதியது

இதற்கிடையே கடந்த 14-ந் தேதி மதியம் இவர்களது படகை கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து 69 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் நடுக்கடலில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி இருந்தனர். மேலும், முந்தையநாள் பிடித்த மீன்களை மீனவர்கள் ஐஸ் போட்டு பதப்படும் பணியில் ஈடுபட்டனர். சிலர் தூண்டிலை சரி செய்தபடியும், சிலர் சமையல் வேலையும் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற லைபீரியா நாட்டை சேர்ந்த போஸ்டன் என்ற எண்ணெய் கப்பல் எதிர்பாராத விதமாக விசைப்படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

மரண பீதியில்...

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் விசைப்படகில் இருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு படகுக்குள்ளேயே விழுந்தனர். பின்னர் அவர்கள் என்ன? நடந்தது என்பதை அறிவதற்குள் படகு ஒருபுறகுமாக சரிய தொடங்கியது.

கப்பல் மோதியதில் படகில் ஆங்காங்கே விரிசல் விழுந்தது. படகின் உள் அறைகளிலும் பெரும் உடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து படகை இயக்கினால் படகுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மற்றொரு படகிற்கு இதுபற்றி தெரிவித்து உதவிக்கு அழைத்தனர்.

இந்தநிலையில் கப்பல் மோதிய விசைப்படகு தொடர்ந்து சரிய தொடங்கியது. இதனால் 14 மீனவர்களும் மரண பீதியில் செய்வதறியாது கூச்சலிட்டனர்.

14 மீனவர்கள் மீட்பு

பின்னர் சிறிது நேரத்தில் உதவிக்கு அழைத்த படகு விரைந்து வந்தது. அதைதொடர்ந்து துரிதமாக செயல்பட்டு அந்த மீனவர்களை சேதமடைந்த படகில் இருந்த 14 மீனவர்களை மீட்டனர். பின்னர், சேதமடைந்த விசைப்படகையும் கயிறு கட்டி மீட்டு நேற்று காலை குளச்சல் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்தனர்.

கப்பல் மோதிய வேகத்தில் படகுக்குள் தூக்கி வீசப்பட்டதில் மீனவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சேதமடைந்த விசைப்படகின் மதிப்பு ரூ.1.25 கோடி என கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விபத்தை ஏற்படுத்திய லைபீரியா நாட்டு போஸ்டன் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story