கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய வெளிநாட்டு வாலிபர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்-சேலத்தில் பரபரப்பு
கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய வெளிநாட்டு வாலிபர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலையில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மிகுந்த பதற்றத்துடன் ஓடி வந்தார். இதை பார்த்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். அந்த நபர் இந்தியில் பேசியதால், இந்தி தெரிந்த நபரை வரவழைத்து, அவர் மூலமாக அந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபர் நேபாள நாட்டைசேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த நபரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:-
என்னுடைய ஊரைச் சேர்ந்த 5 பேர், கேரளாவில் ஓட்டலில் வேலை செய்ய ெரயிலில் என்னை அழைத்து சென்றனர். அங்கு அவர்கள், என்னை மிகப்பெரிய தொகைக்கு விற்று விட முடிவு செய்து பேசிக்கொண்டிருந்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் சேலத்து ரெயிலில் வந்த போது, ரெயிலில் இருந்து இறங்கி தப்பி வெளியே வந்தேன்.
மேலும் கடத்தல்காரர்கள் என்னை பின் தொடர்ந்து வருவதாக நினைத்துக் கொண்டு, வேகமாக அங்கிருந்து பஸ் ஏறி சேலம் பழைய பஸ் நிலையம் வந்தேன். அங்கிருந்து தப்பிச்செல்லும் நோக்கில் அன்னதானப்பட்டி வந்த போது, அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் படி கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அந்த வெளி மாநில வாலிபரை, சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கடத்தல் கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.